செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே??




கண்ணனுடைய லீலா விநோதங்கள் தான் எத்தனை எத்தனை? வெண்ணெய்த் திருடி, வேய்ங்குழலூதி ஆய்ச்சியர் உள்ளம்  கவர்ந்து, மாயம் பல புரிந்து நம் உள்ளத்துக்குள்ளேயேயும்  அல்லவா ஸ்வாதீனமாய் ஆக்கிரமிப்பு செய்து குடியும் புகுந்து  விட்டான்?!

கண்ணனின் தீராத விளையாட்டுக் கதைகளில், அதிகம் அறியப் படாமல் உள்ள,நான் கேட்ட, ஒரு சின்னக்  கதையை உங்கள் கருத்திற்கும், கண்ணனின் கழலடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

கோகுலத்தில் கண்ணனும் அவனுடைய சகாக்களும் அடிக்கும் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. யசோதைக்கு வெண்ணெயைக் காப்பாற்றுவது பெரும்பாடாய் ஆயிற்று. அகப்பட்டுக் கொள்ளாமல் திருடுவதில் அதி சமர்த்தனாக வேறு ஆகிக் கொண்டிருந்தான் கண்ணன். அவனைக்  கையும் களவுமாய்ப் பிடிக்க, திட்டத்துக்கு மேல் திட்டம் போட்டும், தப்பித்துக் கொண்டேயிருந்தான்.

யசோதை கடைசியில் ஒரு நல்ல உபாயம் கண்டுபிடித்தாள். இன்று வங்கிகளில் திருட எத்தனித்தால் அடிக்கிறதே அபாய மணி( burglar alarm)  அதன் முதல் மாதிரியைக் கண்டுபிடித்தவளே யசோதை தான்!

வெண்ணைக் கலயங்கள் வைக்கும் உறியிலிருந்து ஒரு மணிக்  கயிற்றைக் கட்டி,அந்தக் கயிற்றின் மறுமுனையை , அவள் படுத்திருக்கும் அடுத்த அறை வரை நீட்டி, அதன் முனையில் ஒரு வெள்ளி மணியைக் கட்டினாள். யாராவது உறியைத் தொட்டால், உறி  அசைய,அதில் கட்டிய கயிறும் அசைந்து, உள்ளறையில் கட்டப் பட்ட மணியின் நாவை அசைத்து, மணி ஒலிக்க ஆரம்பிக்கும் .உடனே அந்தக் கள்ளனைப் பிடித்துவிடலாம் என்று சரியானதோர் ஏற்பாட்டை செய்து முடித்தாள்.

மாயக் கண்ணனுக்கா இது தெரியாமல் போகும்? திருடவும் வேண்டும்...மாட்டிக் கொள்ளவும் கூடாது...யோசித்தான். நேராக உள்ளறையில் கட்டிவைத்த வெள்ளிமணியின்  அருகில் சென்றான். அதனோடு பேச ஆரம்பித்தான்.
மணியே! உன்னை எதற்கு இங்கே கட்டியிருக்கிறது தெரியுமா?

தெரியும் அய்யனே!. பக்கத்து அறையில் உள்ள உறி  அசைந்தால்,அதிலிருந்து வரும் இந்தக் கயிறு அசையும் போது, நான்  கணகண என அடிக்கத் தொடங்கவேண்டும்.

எதற்கு நீ அடிக்கவேண்டும் தெரியுமா?

தெரியும் பிரபு. வெண்ணைத்  திருடுபவனைப் பிடிக்க..... ஆய்ச்சியரிடம் யசோதை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்

அந்தத் திருடன் யார் எனத் தெரியுமா?

தெரியாது கண்ணா

தெரிந்து கொள் ! அது நான் தான். நீ எனக்கொரு உதவி  செய்ய வேண்டும்.. நான் வெண்ணெய்த் திருடும் போது நீ அடித்து, காட்டிக் கொடுக்கக் கூடாது. எனக்கு சத்தியம் செய்து தருவாயா?

வெள்ளிமணி திணறிப் போயிற்று. தெய்வம் என்னிடம் உதவி கேட்கிறதா ? எனக்கு இத்தனைப் பாக்கியமா?

என்ன பேசாமல் இருக்கிறாய்? எனக்கு சத்தியம் செய்து தருவாயா? இல்லையா?

என் பாக்கியம் பிரபு. நீங்கள் வெண்ணெய்த் திருடும் போது சத்தியமாய் நான் அடித்து ஒலி எழுப்ப மாட்டேன்.

நல்லது. நினைவிருக்கட்டும் கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.

நண்பகல். வேலையெல்லாம் முடித்து, யசோதை சற்று கண்ணயரும் நேரம்... கண்ணன் உறி  இருக்கும் அறைக்குள் தன நண்பர்களுடன் நுழைந்தான்.

கண்ணா! வேண்டாமடா! கண்டிப்பாய் மாட்டிக் கொள்வோம்.
நண்பர்கள் பயந்தார்கள், யசோதையின்  கச்சிதமான ஏற்பாடுகளைப் பார்த்து...

கவலைப் படாதீர்கள். தயாராகுங்கள். ஒருவன் மண்டியிட,மற்றவனைப் பிடித்துக் கொண்டு, குனிந்தவன்  முதுகின் மேலேறி, கலயத்தை எடுத்தான். உறி  ஊசலாடியது. கயிறும் வேகமாய் அசைந்தது... நண்பர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டார்கள். ஆச்சரியம்!! மணி அடிக்க வில்லை. நண்பர்கள் கிசுகிசுத்தார்கள்..பெரிய ஆளடா நீ!

சரி சரி வாருங்கள் என்று அனைவருக்கும் வெண்ணையை அள்ளி அள்ளித் தந்தான்.
தானும் ஒரு கை வெண்ணை எடுத்தான். 
உண்ண வாயருகே கொண்டு போனான். பவழ உதடுகள் பொதிய , வெண்ணையை உண்ணத் தலைப்பட்டான்..

இத்தனை நேரம் அமைதி காத்த மணி “கண கண” என ஒலிக்கத் தொடங்கியது.. ஓடிவந்த யசோதையின் கைகளில் கண்ணன் பிடிபட்டான்.. கையும் வெண்ணையுமாய்.... விக்கித்துப் போனான்.

சற்று சுதாரித்துக் கொண்டு, சற்று இரும்மா. நீ தரும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு முன், நீ கட்டிய மணியை ஒருதரம் பார்க்கிறேனே அம்மா...எங்கும் ஓடி விட மாட்டேன்

அவன் பேசுகையிலேயே கண்ணனின் காலை ஒரு கயிற்றால் பிணைத்தாள். மறுமுனையைக் கையில் பிடித்துக் கொண்டு,சரி .உள்ளே போய் மணியைப் பார்என்று அனுமதித்தாள்.


மணியைக் கோபமாகப் பார்த்த கண்ணன் கேட்டான்..மணியே! சொன்ன வார்த்தை மீறலாமா?

பிரபு... நான் சொன்ன வாக்கை மீறவில்லையே?

என்ன? செய்வதையும் செய்து விட்டு... நீ மீற வில்லையா??

பிரபு,நான் என்ன வாக்கு கொடுத்தேன்?

நான் திருடும் போது அடிக்க மாட்டேன் என்று


பிரபு! நீங்கள் உறியைத்  தொட்ட போது அடித்தேனா?

இல்லை

உறி ஆடியதே  ...அப்போது அடித்தேனா?

இல்லை

சரி கலயத்தை திருடிக் கையில் எடுத்தீர்களே! அப்போதாவது அடித்தேனா?  

இல்லை.. இல்லை... ஆனால் வெண்ணையை உண்ணும்  போது அடித்துக் காட்டிக் கொடுத்து விட்டாயே?

கண்ணா நான் என் கடமையை மட்டுமே அப்போது செய்தேன்..
உனக்கு நெய்வேத்யம் ஆகும் போது அடிப்பதே என் பிறவிப் பயன்.. பிரபு... என் பிரபு... மணி விசும்பத் தொடங்கியது.

கண்ணனைக் கட்டி இழுத்துக் கொண்டு யசோதையும் உரலை நோக்கிப் போனாள்.....

  

27 comments:

மதுரை சரவணன் சொன்னது…

அருமையான கதை ... வாழ்த்துக்கள். வள்மான எழுத்து. பகிர்வுக்கு நன்றி.

பத்மநாபன் சொன்னது…

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உங்களிடம் இருந்து கிருஷ்ண லிலைகளோடு அருமையான பதிவு.

முடிவு அருமை ,முழு பக்தியோடு இருப்பவனை அந்த தெய்வமே நினைத்தாலும் மாற்றமுடியாது..

நல்ல சம்பவக்கோர்வை..வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

மோகன்ஜி கிருஷ்ண லீலா அற்புதம். நெய்வேத்தியத்திர்க்கு அசைந்த அஃறினை மணி கூட புண்ணியம் கட்டிக்கொண்டது. நன்றாக இருந்தது.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சரவணன்... உங்கள் வாழ்த்து மேலும் என்னை எழுத உந்துகிறது.அடிக்கடி சந்திப்போம்

மோகன்ஜி சொன்னது…

நன்றி பத்மநாபன்.. அந்த மணியை இயக்கியவனும் அவனே... நம்மை சேர்த்தவனும் அவனே..

மோகன்ஜி சொன்னது…

உங்கள் வாழ்த்துக்கு நன்றி RVS. நேற்று பலமுறை உங்கள் பதிவில் ஜேசுதாஸ், M.S வீடியோ கேட்டபடி இருந்தேன்.நாமிருவரும்,கண்ணனின் தோழர்களாய் உடனிருந்து,வெண்ணை சட்டியை உருட்டி இருப்போமோ..என்னவோ !!

♥♪•வெற்றி - VETRI•♪♥ சொன்னது…

பகிர்வுக்கு நன்றி...!
மீண்டும் உங்கள் பார்வைக்காக எனது பக்கங்கள் காத்திருக்கிறது..!
http://vetripages.blogspot.com/

மோகன்ஜி சொன்னது…

வாங்க வெற்றி. கண்டிப்பாய் உங்கள் பக்கங்களுக்கு வருவேன்.வெற்றி என் பக்கமல்லவா!

பத்மநாபன் சொன்னது…

நம்மாளு ஞொய்யாளு ஒரே ரகளை..உங்களை பார்த்தே ஆகணும்னு வாங்கஜீ...அழைப்பை ஏற்று ஆரம்பிச்சாச்சு அலப்பறையை..

மோகன்ஜி சொன்னது…

ஆ.. பத்மநாபன் ! நம்மாளு ஞொய்யாளு களைகட்டிட்டாருங்க
நல்ல அருமையான முதல் தொடர்வு.இப்பத்தான் ஞொய்யாளு போன் பண்ணாரு.நான் அவருக்கு நைனாவாம்.பத்மநாபன் தான் 'சித்தப்பூ'வாம். தாய் மாமா RVS அவரை செல்லம் கொஞ்சினாதான் வலைப்பூவுக்கே வருவாராம்.RVS வாங்க!
ஒரு குத்து ஆடிட்டு போங்க. ஆவலுடன்
காத்திருக்கும் நைனா

2 September 2010 5:37 PM

அப்பாதுரை சொன்னது…

முன் கேட்டிராத சுவையான கதை.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்.. கருத்துக்கு நன்றி! இன்னும் எழுதுவோம்

பத்மநாபன் சொன்னது…

மோகன்ஜி, நையாண்டியா அவரை சித்தரித்து வலையில் சிருஷ்டித்ததால ``நைனா``ன்னா சொல்லிட்டாரு நம்ம ``ஞொய்னா``.

தொடரவிட்டு சிரிப்போம். நம்மாளு ஆர்.வி.எஸ் யை எவ்வளவு படுத்த போறாரோ? சிரிக்க ரெடியா இருப்போம்.

ம.தி.சுதா சொன்னது…

ஆப்பு வைத்தவனுக்கே மணி ஆப்பு வைத்தவிட்டதே கதை அருமை... என் தள வருகைக்கு மிக்க நன்றி.... நான் அண் தான் என் சுருக்கப் பெயர் தான் அது... சகோதரா.. நாளை மறுதினம் நானும் கண்ணனை ஒருவருடன் ஒப்பிட்டு எழுதப் போகிறேன் தவறாமல் வந்து போங்க...

கௌதமன் சொன்னது…

நல்ல பகிர்வு. சுருக்கமாக சுவையாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி KOGGOUTHAMAN.அடிக்கடி வாங்க

அண்ணாமலை..!! சொன்னது…

மாயக்கண்ணனாயிற்றே!!
:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹ்ஹா..அற்புதம் கேட்டிராத கதை! கிருஷ்ணாஷ்டமி தெரியும்! ராதாஷ்டமி தெரியுமா? ரிஷபனுக்கு வாங்க!

ரவி சொன்னது…

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஜி! கிருஷ்ண லீலா அற்புதம்.

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! மீண்டும் நன்றி!

bandhu சொன்னது…

என்ன ஒரு அருமையான கதை! அற்புதம்!

Geetha Sambasivam சொன்னது…

இந்தக் கதையை ஏற்கெனவே பலமுறை பல புத்தகங்களிலும் படிச்சிருந்தாலும் உங்கள் நடையில் படிக்கப் பரவசம்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆடு திருடிய கள்ளன் கதை கேள்விப்பட்டிருக்கேன். வெண்ணெய் திருடிய கண்ணன் முழிப்பதை இப்போது படித்தேன்!

கோமதி அரசு சொன்னது…

அருமையான அழகான கதை.
கண்முன்னே அனைவரையும் பார்த்தேன். அற்புதம்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி பந்து ஜி!

மோகன்ஜி சொன்னது…

நன்றிக்கா!