ஞாயிறு, ஜூலை 04, 2010

தமிழே ! என் தமிழே !!

(பதினைந்து வருடங்களுக்கு முன்,கடலூரில் ஒரு அந்திமாலைப் பொழுது. என் இல்லத்திற்கு திரு இறையன்பு I.A.S அவர்களும், மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களும் வந்திருந்தனர்.
அப்போது நான் ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய ஊரின் வங்கிக் கிளைக்கு மேலாளராய்
மாற்றலாகி, விடுப்பில் வந்திருந்த நேரம்.
புது ஊரில், யாரோடும் தமிழ் பேச வாய்ப்பில்லாத சூழலில், அதற்காக நான் தவித்த தவிப்பையும், சில சம்பவங்களையும் இருவரோடும் பகிர்ந்து கொண்டேன். உணர்வு பூர்வமான சிறு மௌனத்திற்கு பின் திரு.இறையன்பு அவர்கள், இந்த சம்பவத்தை அப்படியே கதை போல் எழுதுங்களேன் என்று சொன்னார். அந்த அன்புக் கட்டளையில் எழுதியது தான் இது. இதைக் கதை என்பதா? கட்டுரை என்பதா? நீங்களே சொல்லுங்களேன்!)

*****************

அன்றாட வாழ்க்கையில் நாம் சற்றும் கவனம் கொள்ளாத விஷயங்கள் சில,அவை இல்லாத சூழ்நிலை வரும் போது, எப்படித்தான் பூதாகாரமாய் நம் சிந்தையை ஆக்கிரமித்துக் கொள்கிறது? எப்படியெல்லாம் அதற்காக ஏங்கச் செய்கிறது?

இன்று அந்த நிலையில் தான் அய்யா நான்.....

வங்கிப்பணி எனும் நாடோடி வாழ்க்கையில் எதிலும் அதிகம் பற்றுக் கூடாது தான்..

அதை நான் பற்ற வில்லை அய்யா.. அது தான் என்னைப் பற்றிக் கொண்டது. என்ன என்கிறீர்களா?

தமிழ் அய்யா , தமிழ்! அந்தத் தேமதுரத் தமிழோசை கேட்காமல் தான் இந்த தவிப்பு.

முந்தைய இட மாற்றங்களில் கல்கத்தா,பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு சென்ற போது இந்த தவிப்பு இல்லை.அங்கெல்லாம் தமிழர்களும்,என் குடும்பமும் உடனிருந்த படியால் இப்படியொரு தமிழ் ஏக்கம் இல்லை போலும்.

இந்தமுறை மாற்றத்தில், இதம் தரும் மனை நீங்கி, தமிழ் வாசனையே இல்லாத, நெடுஞ்சாலை ஒட்டிய ஒரு ஆந்திர கிராமத்தில் வந்து விழுந்தேன். இங்கு எல்லோரும் “பச்சை”தெலுங்கர்களே. காதார தமிழ் கேட்க நான் ஏங்கும் ஏக்கம் மனதில் பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சில நிமிடங்களுள் காதில் விழும் செலவுப் பட்டியலும்,என் சுய சமையலுக்கு கொடுக்கப்படும் குறிப்புகளும் தமிழில் சேர்த்தியில்லை.

அந்த செவ்வாய்க்கிழமை மாலை,ஒரு பெரும் ஆனந்தத்தை, லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தது. ‘தமிழ்ச்செல்வி’ என்ற பெயர் பலகையுடன்

நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த அந்த சரக்கு லாரியை கண்ட போது நான் கொண்ட பரவசம் இருக்கிறதே...

லாரியை நோக்கி ஓடினேன் .டிரைவரைத் தேடினேன்...

”எந்த ஊருப்பா நீ?”.... என் குரல் படபடத்தது.

“அட! தமிழா சார்? இது மதுர வண்டி சார்.. இம்புட்டு தொலவு வந்து என்ன சார் பண்றீங்க?”

“பேங்க் மானேஜர்ப்பா...உன் பேர் என்னய்யா?”

“நான் டேவிட் சார்.. இவன் கிளீனர் .பேரு சுடத்தண்ணி”

“சுடத்தண்ணியா? என்னய்யா இது பேரு?”

“ஆமாம் சார். அவன் பேரே அதான்.. எவன் வச்சானோ.. அனாதப் பொணம்’
‘அப்படி சொல்லாதய்யா... சின்னப் பையனைப் போய் ‘

‘இவனா சார் சின்னவன்? வெவரமானவன் சார். நம்பிடாத’

அருகிருந்த டீக்கடைக்கு அழைத்து சென்று இருவருக்கும் விருந்தோம்பல்.

‘அப்பாராவ்.. மூடு டீ வேயி நைனா”

‘டேவிட். பிஸ்கட் எடுத்துக்கய்யா’

டீக்கடை அப்பாராவுக்கு ஆச்சரியம். முதன் முதலாய் ரோட்டில் நின்று டீ குடிக்கும் இந்த மேனஜரைப் பார்த்து .

‘அப்புறம் சொல்லு டேவிட். மதுரை நிலவரம் எல்லாம் எப்படி?’

வேகவேகமாய் தமிழ் பேசித் தீர்த்துவிட துடிக்கிறது மனசு.
சரஸ்வதி சபதம் சினிமாவில் ஊமை சிவாஜிக்கு பேச்சு வந்ததும் வேகவேகமாய் தமிழில் அடுக்குவாரே அதுபோல...

‘வண்டி எங்கே போகுது டேவிட்?’

‘கல்கத்தா சார். ராத்திரி இப்படி ரோட்டோரம் வண்டிய நிப்பாட்டிட்டு விடிகாலையில் தான் சார் கிளம்புவேன்.இந்த தெலுங்கனுங்க ஓட்டல்ல சாப்புட்டு நவத்துவாரமும் எரியுது சார்.’

‘டேவிட். இன்னைக்கு வேணா என்னோட எடத்துல தங்கிக்குங்களேன் .ராத்திரி என்னோட சாப்பிடலாம்...’

‘ஐயோ சார்.. பெத்த ஆத்தா மாதிரி கேட்குறீங்க..சந்தோஷம் சார்.
உங்களுக்கு என்னாத்துக்கு சிரமம் சார். நீங்க வாங்கித் தந்த டீயே போதும். ஊட்ல போய் என் சம்சாரத்துகிட்ட சொல்வேன் சார். எனக்கு நம்ம ஊர்க்கார பேங்க் மேனேஜர் டீ வாங்கித் தந்தார்னு.’


எனக்கோ தனிமையைக் கொல்ல வேண்டும். தமிழில் பேச வேண்டும்.

‘மேல பேசாத டேவிட்.. கிளம்புன்னா கிளம்பு. எனக்கொரு கஷ்டமும் இல்ல... சும்மா வாப்பா.’

‘எங்க ஊரானா பேங்க் மேனேஜராண்ட நின்னு இவ்ளோ நேரம் பேச விடுவாங்களா? ரொம்ப மெனக்கெடுறீங்க சார்.”

“டிரைவர் அண்ணே! சாரு அய்யராட்டங்க்கீது. ராத்திரி கவுச்சி சாப்பிடலாம்னு சொன்னியே? –இது சுடத்தண்ணி.

‘எல பொறம்போக்கு! பொத்திக்கிட்டு வாடா... சரி சார். இவ்ளோ தூரம் என்னையும் மனுஷனா மதிச்சு கூப்புடுறீங்க . உங்க வீட்டுல ஒரு ஓரமா படுத்துட்டு கருக்கல்ல கிளம்பறோம் சார்.. ஊர் பேர் தெரியாதவன வெத்தில பாக்கு வச்சு கூப்புடுறீங்க. வீடெங்க சார்?’

‘லாரிய எடு டேவிட். இதே ரோடுல மூணு மைல் போகணும்.’

வண்டியில் ஏறினேன். லாரியின் உறுமல் கூட தமிழில் ஒலித்தது!

நான் இருந்த கெஸ்ட் ஹவுஸ் கொய்யா,சப்போட்டா,தென்னை,மா மரங்கள் இருந்த தோப்பின் நடுவே இருந்தது..பாரதி கேட்ட காணி நிலம் போல அங்கு அனைத்தும் இருந்தது, பாட்டுக் கலந்திட ஒரு பத்தினி பெண் நீங்கலாக ...

‘எம்மாம் பெரிய வீடு சார்.... என்ன சார் நீங்களே பூட்டத் திறக்குறீங்க? ஊட்ல அம்மா இல்லியா சார்?.. எங்கள சாப்பிட வேற சொன்னீங்க?.’டேவிடின் குழப்பத்தில் சாப்பாட்டுக் கவலை தொனித்தது.

‘நான் தனியாத் தான் இருக்கேன் டேவிட். நான் நல்லாவே சமைப்பேன் ராஜா. தைரியமாய் சாப்பிடலாம். மணி ஏழு தானே? எட்டரைக்கெல்லாம் சாப்பிடலாம்.’

‘சரி சார்.’ டேவிட் வீட்டை முழுவதும் துப்புரவாக கண்ணால் அளந்தான்.” எல்லாம் இருக்கு சார். ஆனா ஒண்ணுமே இல்ல”

இவன் டிரைவரா இல்லை பட்டினத்தாரா?

‘சார் நான் குளிச்சிக்கவா?’

‘ஜம்னு குளிப்பா.. சோப்பு அங்கியே இருக்கு.டவல் தரேன்.’

‘அய்ய..அதெல்லாம் வேணாம் சார். டேய் பன்னாட. வண்டில இருந்து என் லுங்கி,துண்ட கொண்டா’ சுடத்ததண்ணியை விரட்டினான்.

சிரித்துக் கொண்டேன். ‘உட்காரு டேவிட்’

தரையில் அமர்ந்தான்.

‘சார் ஒரு டி.வி ,ரேடியோ பொட்டி கூட இல்லாமயா இருக்கீங்க?’

‘என்ன விடு. உன்னப் பத்தி சொல்லு’

‘என்னப் பத்தி என்னா இருக்கு சொல்ல? ஸ்டீரிங் புடிச்சிகுனே பொறந்தேன். ராத்திரி பகல் பாக்காம ஓட்டிக்கினே இருக்கேன். என்ன நம்பி நாலு வயிறு இருக்கே சார்!’

‘ஓ.. சொல்லு’

‘நீங்க நெனச்சிக்கிட்டு இருக்குற மாதிரி நான் ஒண்ணும் உத்தமன் இல்லே சார். லாரிக்காரன் பண்ற தப்பு தண்டா ஒண்ணையும் நான் உடலே சார் . எங்க ஆத்தா ரோதன தாங்காமத் தான் சரோஜாவ கட்டுனேன் சார். மாட்டோட கண்ணுகுட்டியா ரெண்டு பொட்ட புள்ளைங்களயும் ஓட்டியாந்தேன் சார்’

‘புரியற மாதிரி சொல்லுப்பா’

‘சரோஜா ஏற்கனவே கண்ணாலம் ஆனவ. புருஷன் ஆக்சிடன்ட்ல போய்ட்டான். சின்னப் புள்ளைங்களோட பக்கத்து விட்ல இருந்தா.
எங்க ஆத்தாவுக்கு இளகின மனசு சார். என்னிய கரைச்சு அதுக்கு கட்டி வச்சுடுச்சு சார். அதுவும் நல்ல பொண்ணு தான். என் பங்கா இன்னும் ரெண்டு பெத்துக்குனோம்’ சிரிக்கிறான்.

‘அட.. பெரிய கதையால்ல இருக்கு? சரி. போய் குளி.’

குக்கரில் உலை வைத்தேன். வெங்காயம்,கத்தரிக்காய் போட்டு சாம்பார், உருளைக் கிழங்கு கறியும் சமைத்து,அப்பளம் பொறித்து,
தயிரை மூன்று பேருக்குமாய் மோராக்கி.... சமைக்கும் போதே இருவருடனும் ஊர்க்கதை பேசி......

எதற்காக இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன்? யார் இவர்கள்?
டேவிடுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

சாப்பிட உட்கார்ந்தோம்.

“நெசம்மா சொல்றேன். ரொம்ப ருசியா இருக்கு சார். உங்களுக்கு நீங்களே சமைச்சுகிட்டு ஒண்டியா எப்புடி சார் சாப்பபிடுறீங்க?’

‘வேறே வழி? இந்த ஊர் ஓட்டல்ல காரம் ஜாஸ்தி. எனக்கும் நவத்துவாரம் இருக்குதேப்பா!’

கண்ணுல நீர் முட்ட டேவிட் சிரித்தான். ‘நம்ம கிட்ட இருந்து நவத்துவாரத்த கத்துக்கிட்டீங்க போல ?’.

‘உன் வருமானத்துல சந்தோஷமா இருக்கியா டேவிட்?’

‘சந்தோஷம் வருமானத்துலயா? மனசுல தான் சார். இந்த நிமிட்டு நான் ராஜா சார். பெரிய பதவில இருக்கிற மேனேஜர் எனக்காக சமைச்சு வயிறார போட கர்த்தரு இன்னிக்கு ஆசீர்வதிச்சிருக்குறாரு. நாலு சக்கரத்துக்கு மேல என் வாழ்க்கை சார். எப்ப வேணும்னாலும் எதுவும் ஆகலாம். முன்னமெல்லாம் ரோட்சைட்ல வண்டிய நிப்பாட்டிட்டு கெட்டதுங்களோட கொஞ்ச நேரம் குஜாலா இருக்கிறது தான். சம்சாரத்துக்கு சத்தியம் பண்ணி குடுத்தேன்... கருமத்த உட்டேன் சார். ஒரு வாரம்,பத்து நாள் இப்படி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போய் பிள்ளைங்கள பாக்கிறப்போ
மனசு பொங்கி வழியும் சார். வீட்டுக்கு எப்போ போறோம்னு மனசு அடிச்சிக்கும் சார். உனக்கு எத்தினி புள்ளைங்க சார்?’

‘எனக்கா? ரெண்டு பசங்க, ஒரு பொண்டாட்டி.”

டேவிட் பெரிதாக சிரிக்கிறான். இவன் சிரிப்பில் ஒரு தோரணை இருக்கிறது. ‘என்ன சார் ஒரு பொண்டாட்டி? பின்ன பத்தா கட்டுவாங்க? என்னக் கேட்டா ஒண்ணே வேஸ்ட்டு சார். நம்ம பாட்டன் கல்யாணம் கட்டுனான். அப்பன் கட்டுனான். நம்மளும் கட்டுனோம். நம்மள மாதிரி நம்ம பிள்ளையும் கட்டுவான். அவன் கட்டலன்னா நாம் தான் உடுவோமா?’

‘அடேயப்பா! அப்பிடிப் போடு!

‘கண்ணாலம் கட்டாம இருந்துட்டா பரவாயில்ல. கட்டினப்புறம் இல்லாம இருக்கிறது கஷ்டம் சார்.. சம்சாரத்துக்கிட்ட ஸ்பெசலா ஒண்ணும் இல்ல. பழகிடுறோம் பாத்தீங்களா..அந்த பாவம் தான்.
கூடவே இருக்கறச்சே அவ முகத்தக் கூட பாக்காம நம்ம சோலிய பாத்துகிட்டிருப்போம். நாலு நாள் அவ இல்லையின்னா கையொடிஞ்சாப்புல ஹோன்னு ஆயிடும் சார்..எல்லாம் நம்ம மனசு தான் சார்.’

‘என்ன சொல்ற டேவிட்? உன் மனசுக்கு கொடுக்கிற முக்கியம் அந்த மனுஷிக்கும் கொடுப்பா.’

‘சார். நான் உங்களை மாதிரி படிச்சவன் இல்ல...ஆனாலும் சொல்றேன். எல்லாம் மனசு தான் சார். லாரி சூட்டுல உட்கார முடியாம எரியும் பாரு.... அப்ப வண்டிய புளிய மரத்துல ஏத்திடலாம்னு தோணும். ஒரு வாரம் வண்டிய எடுக்கலேன்னு வச்சிக்கோ,அப்போ ஸ்டீரிங் புடிக்க கையெல்லாம் நமநமங்கும்.’

‘அப்போ உனக்கு லாரியும் பொண்டாட்டியும் ஒண்ணு தான் இல்லையா?’

‘எனக்கு தெரிஞ்ச ஞாயம் சார். எல்லாமே நம்ம மனசு தான்.
ஆனா ஒண்ணு.... எரியுதேன்னு லாரியையும் புளிய மரத்துல ஏத்த மாட்டேன்...ஆளப் புடுங்குதேன்னு சம்சாரத்தையும் விட்டுற மாட்டேன். என்ன சார் நான் சொல்றது? அய்யாவுக்கு தெரியாத ஞாயமா? உங்க புண்ணியத்துல இந்த ராத்திரி கால் நீட்டி படுக்கிறேன் சார். குட்நைட்டு...’

படுத்தவன் ரெண்டு நிமிஷத்தில் தூங்கிப் போனான். முன்னமே படுத்துவிட்ட சுடத்தண்ணியின் உறுமல் குறட்டைக் கூட எனக்கு எரிச்சலூட்டவில்லை.

தூக்கம் என்னுடன் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருந்தது. என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எந்த தேவையோ நிர்பந்தமோ இன்றி இவனை அழைத்து வந்தது வாயார தமிழ்ப் பேச வேண்டி தானே?

இவனைத் தமிழில் பேசச் சொன்னால், வாழ்க்கையை அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்?

ஹும்... எல்லாவற்றுக்கும் நம் மனசு தானே காரணம்?*******